Wednesday, December 18, 2013

திருப்பாவையில் பகவானின் ஐந்து நிலைகள்!!!



வைணவத்தில் திருமால் கோயில்கொண்டுள்ள திருமேனிகளை ‘அர்ச்சாவதாரங்கள்’ என்றே அழைக்கின்றனர். திருமாலின் ஐந்து நிலைகளாகிய ‘பரம்’, ‘வியூகம்’, ‘விபவம்’, ‘அந்தர்யாமி’, ‘அர்ச்சை’ என்பனவற்றில் ஐந்தாவதாகச் சொல்லப்படுவது. இவ்வைந்து நிலைகளையும் சுவாமி நம்மாழ்வார்,


"விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!" (திருவாய்மொழி, 6.9.5)

எனும் பாசுர வரிகளில் காட்டியுள்ளார். இதில் ‘விண்மீதிருப்பாய்’ என்பது பரவாசுதேவனாக ஸ்ரீவைகுண்டத்தில் கோயில்கொண்டுள்ள பர நிலையைக் குறிக்கிறது;

‘மலைமேல் நிற்பாய்’ என்பது திருவேங்கடம் முதலான திருத்தலங்களில் அர்ச்சை நிலையைக் குறிக்கிறது;

‘கடல் சேர்ப்பாய்’ என்பது திருப்பாற்கடலில் அனந்த சயனக் கோலத்தில் உள்ள வியூக நிலையைக் குறிக்கிறது;

‘மண்மீதுழல்வாய்’ என்பது இராமன் கண்ணன் முதலான வடிவங்களைக் குறிக்கிறது; இதுவே விபவ அவதார நிலையாகும்.

‘இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்’ என்பது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து, உயிருக்குயிராய் அனைத்தையும் ஆள்பவனாக விளங்கும் அந்தர்யாமி நிலையைக் குறிக்கிறது.

மேற்கண்ட பாசுரமும் வடமொழி வேதவாக்கியம் ஒன்றை ஒட்டியே வருகிறது. அது தைத்திரீய உபநிடதத்தின் நாராயணீய அனுவாகத்தில் (சிலர் இதை ‘மகா நாராயண உபநிஷத்’ என்றும், சிலர் ‘யாக்ஞிக உபநிஷத்’ என்றும் அழைக்கின்றனர்) உள்ள,

"அம்ப₄ஸ்ய பாரே பு₄வனஸ்ய மத்₄யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் |சு’க்ரேண ஜ்யோதீஹும்ஷி ஸமனுப்ரவிஷ்ட: ப்ரஜாபதிச்’ சரதி க₃ர்பே₄ அந்த: ||"

என்னும் முதல் மந்திரம். இம்மந்திரமானது பதத்திற்குப் பதம் மேற்கண்ட திருவாய்மொழிப் பாசுரவரிகளுடன் உடன்படுகிறது.

நம்மாழ்வாரை "வேதம் தமிழ் செய்த மாறன்" என்று அழைப்பது வெறும் மிகைப்படுத்திப் புகழ்வதற்காக ஏற்பட்ட அடைமொழியன்று; இவ்வாறு நூற்றுக்கணக்கான பாசுரங்களில் வடமொழி வேதாந்தத்தின் உட்பொருளை உண்மையிலேயே தமிழில் செய்திருக்கிறார் என்பதற்காக. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சையாகிய இவ்வைந்து இறைவடிவங்களில் ஒவ்வொன்றும் சிறப்பானவை, முழுமையானவை. எனினும், அர்ச்சை நிலையானது அனைவராலும் எளிதில் அடையத்தக்கதாக – எளிமையின் சிகரமாக இருப்பதனால் மற்ற நான்கிற்கும் இல்லாத தனிப்பெரும் பெருமை உள்ளதாகப் பெரியோர்கள் பகர்வர். அனுபவத்திற்காகச் சில பெரியோர்கள் இப்படி விளக்கம் கூறுவர்:

இதையேதான் ஸ்ரீ ஆண்டாள் தன் பாசுர வாயிலாக சொல்கிறாள், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனை அழகாக திருப்பாவையின் பாசுரங்களில் செதுக்கி இருக்கிறாள் என்பது இந்த பாசுரங்களின் அமைப்பை பார்த்தால் விளங்கும்.

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சையாகிய இவ்வைந்து இறைவடிவங்களில் ஒவ்வொன்றும் சிறப்பானவை, முழுமையானவை. இதைத்தான், முதல் 5 பாசுரங்களும் பகவானின் 5 நிலைகளை சொல்லியவறே ஸ்ரீ ஆண்டாள் குறிப்பிடுகிறாள்

பரம் - பிறவிப் பிணி நீங்கப்பெற்று முக்தி நிலையை ஏந்தியவர்கள் வாழும் பரமபதத்தில், பிறவி நோய்க்கு மருந்தாகிய திருமால் பர வாசுதேவனாகக் கோயில் கொண்டிருப்பது, வற்றாத கடலுக்கு நீர்ப்பாசனம் செய்வதைப் போன்றதாம்.

(முதல் பாசுரத்தில், நாராயணன் என்று பரமபத நாதனை சொன்னாள்.)

பாற்கடலில் வியூக மூர்த்தியாகப் பள்ளிகொண்டிருக்கும் வடிவமானது நல்வினைப் பயன்களால் உயர்பதவி ஏந்தியுள்ள தேவர்கள், முனிவர்கள் முதலானோர்க்கு மட்டும் அடையக்கூடியது.

(இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியை சொன்னாள்.)

அந்தர்யாமி நிலையானது எங்கும் வியாபித்திருக்கும் தன்மையாகும். இந்நிலையானது நமக்கு மிக அருகில் – ஏன், நமது இதயத்திலேயே – இருந்தாலும், அதுவும் யோகிகளுக்கும் சித்தர்களுக்கும் முனிவர்களுக்குமே எட்டக்கூடியது.

(மூன்றாம் பாடலில், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியை சொல்கிறாள்! )

விபவ அவதாரம் என்பது இராம கிருஷ்ணாதி அவதாரங்களைக் குறிக்கும். என்றைக்கோ பெருக்கெடுத்து ஓடியிருந்தாலும் இன்றைக்கு நாம் நேரிடையாகப் பயனடையாதபடி வற்றியுள்ள காட்டாறு போன்று, வேறு யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கு மாத்திரமன்றோ விபவாவதாரத்தை நேரில் கண்டு கூடிக்குலாவும் அனுபவமும் கிட்டியது!

(நான்காம் பாசுரத்தில், "ஆழிமழைக் கண்ணா" என்று ராம, கிருஷ்ண அவதாரங்களைக் விபவ நிலையை குறிக்கிறாள்.)

அர்ச்சை நிலை என்பது இன்றுவரையிலும் என்றென்றும் அனைவருக்கும் காட்சி தரும் மிக எளிய நிலையாகும். இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு.

(ஐந்தாம் பாசுரத்தில், "மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்" - அர்ச்சை நிலை - பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை.)

"எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளைக் கோயில் கருவறையில் ஒரு சிறிய உருவமாகக் காண நினைப்பது சரியா?" என்ற ஐயம் பலருக்கு எழக்கூடும். பரம்பொருள் தன் சொரூபத்திற்கு – இலக்கணத்திற்கு ஏற்றவாறு எங்கும் நீக்கமற முழுமையுடன் நிறைந்திருப்பதற்கு "பொதுப் படர்தல்" என்று பெயர்.

எங்கும் நிறைந்துள்ள பொழுதும் மெய்யடியவர்கள் கல்லிலும் மரத்திலும் உலோகத்திலும் தாம் விரும்பும் மூர்த்தியை அமைத்து வழிபட விரும்பும்பொழுது அவ்வுருவில் இறைவன் மறுபடியும் தன் கலியாண குணங்களுடன் இறங்கி வந்து, அதை சுத்த சத்துவமாக மாற்றித் திருமேனியாகவும் ஏற்றுக்கொள்கிறான். இதற்கு "சிறப்புப் படர்தல்" என்ற பெயருண்டு.

"பொதுப் படர்தல்" வகையைச் சேர்ந்தவைகளுக்கு முக்குணங்களின் தாக்கமும் அதனால் விளையும் குறைபாடுகளும் உண்டு; ஆயினும் "அங்கும் பரம்பொருள் உள்ளது" என்ற மனோபாவத்துடன் அவ்வப் பொருள்களுக்கு ஏற்றவாறு தக்க மரியாதையைத் தருவது அவசியமே. ஆயினும், வழிபடத்தக்க – பூஜிக்கத்தக்க உருவங்கள் என்பது "சிறப்புப் படர்தல்" வகையைச் சேர்ந்தவையே; அவற்றிற்கு முக்குணங்களின் சம்பந்தமில்லை. (வடமொழியில் இவ்விரண்டு வகையான படர்தலுக்கும் "சாமானிய வியாப்தி", "விசிஷ்ட வியாப்தி" என்று பெயர்.)

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ள மற்றோர் நம்பிக்கை, கோயில்களில் உள்ள அர்ச்சை வடிவங்கள், சுத்த சத்துவ மயமானவையே.

இதை ஒட்டித்தான் ஸ்ரீ தியாகய்யர், பாசுர காலங்களுக்கு பின் வாழ்ந்தவர், ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்கள் சேவித்தவர், பஞ்சரத்தின கீர்த்தனைகள் - இவரும், பகவானின் 5 நிலைகளை கீர்த்தனைகளாய் எழுதியுள்ளார். உன்னிப்பாக கவனித்தால் புரியலாம். வார்த்தைகளுக்கும் பொருளுக்கும் ஏற்றார் போல், இந்தந்த கிருதிக்கு இந்த ராகத்தில் பாடவேண்டும்மென வரன்முறை படுத்தியுள்ளார். "முழுமதி முகத்தவனின் வடிவழகையும் கம்பீரத்தையும் தம் இதயத்தாமரை தன்னில் கண்டு பிரம்மானந்தத்தை அடையும் மகானுபாவர்களுக்கு எனது வணக்கங்கள்" என்று தியாகப் பிரம்மம் பாடுவதிலிருந்து அந்த அந்தர்யாமி நிலையும் சாமானியர்களுக்கு எட்டாக்கனி என்றே விளங்குகிறது.

(சில பகுதிகள் - ஸ்ரீ வைஷ்ணவம் தொகுப்பில் இருந்து)