இன்னைக்கு ஷார்ட் கேர்ள்ஸ் பத்தி ஒருத்தர் போஸ்ட் பண்ணியிருக்கார். எனக்கு உயரமான பெண்கள் என்றால் அலாதிப் ப்ரியம். அந்தக் கால கேப்ரியாலா சபாடினி, மரியா ஷரபோவா, ப்ரூக் ஷீல்ட்ஸ், ருவாண்டா அங்கே ககாமே, நம்ம ஊரு சுஷ்மிதா சென், இலியானா என இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்..
என்னோட சின்ன வயசுல, +2 படிக்கும் வயதுன்னு நினைக்கின்றேன், எல்லோருக்கும் இருக்கும் அதே டீனேஜ் பருவம். உடம்பில் ஏற்படும் தாறுமாறான ஹார்மோன்களின் உதவியால், பல தடுமாற்றங்கள். Adolescence ஹிம்சைகள். பல ஆயிரம் கனவுகளோடு சஞ்சரிக்கும் வயது. எல்லையற்ற ஆனந்த வாழ்வு. இனம் புரியாத சஞ்சலமான வாழ்க்கை. இதையெல்லாம் தவிர்க்க முடியாத இளமைப் பருவம்.
அன்றைய காலகட்டத்தில், இந்திய கலாச்சார முறைகளில் நிறைய கட்டுப்பாடுகளினாலும், அதனைப் பற்றி சரியான அணுகுமுறை - புரிதல் இல்லாததாலும் பல குழந்தைகள் விடலைப் பையன்களாக மாறிக் கொண்டிருந்தார்கள்.
எங்க வீட்டில், ஒவ்வொரு வாரமும் கல்கி, ஆ. வி, குமுதம் வரும். அதில் குறிப்பாக குமுதம் இதழ்களில் வரும் தொடர்கதைகளுக்கு ஜெயராஜின் படமே இருக்கும். அவர் வரைந்த படங்களையே, கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் வயது. அது மட்டுமல்ல, கதையில் வரும் ஹீரோயினை கூட லவ் பண்ணுவோம். ரசிப்போம். ஏனெனில், ஜெயராஜ், பெண்களை மிக அழகாய் வரைவார். அதில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் பனியனில் எழுதியிருக்கும் வாசகங்கள் மிகவும் பிரசித்தம். அந்த வரிகள் கூட படிக்கும் படி தெள்ள தெளிவாக இருக்கும். ஆனால், எல்லாமே ஏடாகூடமாக இருக்கும். சிலதுகள் இன்னும் நினைவில், Wait until Dark, TNDCC, Catch me if you can, Too big to hold, Etc etc.
ரொம்பவே ஆர்வமாக இதனைப் பற்றி ஃப்ரெண்ட்ஸ் மத்தியில், சிலாகித்து பேசிக் கொண்டிருப்போம். ஒருத்தன் என்ன செய்தான், எல்லா வாரங்களில் வெளியாகிய பனியன் வரிகளை எழுதிக் கொண்டு வந்து விட்டான். அதனை சர்குலேட் வேறு பண்ணிருந்தார்கள். நானும் ஒரு காப்பி எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்.
எங்க ஏரியாவில், என்னை விட கொஞ்சம் நாலு, ஐந்து வயது வித்தியாசத்தில் காலேஜ் போகும் பெண் ஒருவர் இருந்தார்கள். பெயர் சரியாகத் தெரியவில்லை. கற்பனையாக பூர்ணிமா என அழைப்போம்.
பூர்ணிமா ரொம்பவே உயரம், வெரி ப்ரெட்டி, காலேஜ் போகும் போது, எங்க ஸ்ட்ரீட்டை தாண்டித் தான் போக வேண்டும். அந்த உயரமான அழகு, என்னை நிலை குலைய வைக்கும். அசந்து போய் நின்னுடுவேன். இவ்வளவு உயரமா!!!
பொதுவாக பெண்கள், நம்மை ஆர்வமாக பார்க்க வைத்து விடுவார்கள். ஏதோ ஒன்று, வசீகரிக்கும் அழகு அவர்களிடம் இருக்கும். அந்த இளம் வயதில், பெண்கள் நமக்கு ஆச்சர்யமானவர்கள். ஒரு ஈர்ப்பு அவ்வளவே. சற்றே பின்னோக்கி பார்க்கையில், எவ்வளவு பெண்கள் என்னுள், ஆழமான நினைவடுக்குகளில் இன்றும் தங்கியிருக்கிறார்கள்.
ஒரு தீபாவளி ஈவ்னிங், என்னோட சிஸ்டர், "ராம், பெருமாள் கோயில் போகிறேன் வாயேன்" என்றாள். சேஷாத்ரி கூட இன்று இல்லை. ஆர்வமாக வெடிகளை கொளுத்தும் நான், இன்றைய தீபாவளி வெடிச்சத்தம் பிடிக்கவேயில்லை. போரடிக்கவே, தங்கையோடு கோயில் போனேன். எங்கும் தீபங்கள்.
வழக்கமான கோயில் தான், இன்று அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால் அழகிய பெண்களின் சிரிப்பலைகள். சற்று கூச்சம் வேறு ஒட்டிக் கொண்டது.
வெளிப் பிரகாரத்தில், வலது புற சுற்றில், அழகான பெண்களை தவிர்த்து விட்டு, ஏனோ அன்று பவளமல்லி செடியைப் பார்க்க நேர்ந்தது.
சாயங்கால இருட்டு, வெள்ளை இதழ்களும், சிவப்பும் மஞ்சளும் ஃப்யூசன் ஆன அடிப்பாகம் கொண்ட பவளமல்லி மலர்கள் கொட்டியிருக்க, ரம்மியமாக இருந்தன. இதனை வஸந்த காலத்தில் பார்க்கும் போது, இன்னும் அழகாய் இருக்கும். அதுவும் மழை நின்ற பிறகு, கொட்டிய பவளமல்லியைப் பார்க்க வேண்டுமே அழகோ அழகு. வாசனையும் மயக்கம் வரவழைக்கும். இப்போதும் உணருகிறேன்.
ஏனிந்த மாற்றம் எனக்குள் புரியவில்லை. அவளின் நினைவாக இருக்குமோ, சரியாகத் தெரியவில்லை. சிறிய வயதிலிருந்தே இந்த கோயிலுக்கு வருகிறேன். தனுர் மாதம் வந்துவிட்டால், திருப்பாவை சேவித்தல். அதை விட பட்டர் என்ன தருவாரோ மிளகு பொங்கலா, ததியோன்னமா, புளியோதரையா மனம் அல்லாடும். ஆனால், இன்றோ வஸந்த காலத்தை பற்றி அல்லவா மனம் நினைக்கிறது. நிறைகிறது. எவ்வளவு ரசாயன மாற்றங்கள் எனக்குள். பெண் என்பவள் எவ்வளவு ஆழமாக நமக்குள் வேரூன்றி போகின்றாள். அசாதாரண உணர்வு!!!
வலது மண்டபத்தில் தாயாரை சேவித்து விட்டு, அடுத்து ஆண்டாள் மண்டபம் நுழைகையில், அந்த பூர்ணிமா என்னை க்ராஸ் செய்து போனார்கள். பாட்டல் க்ரீன் ஆஃப் சாரி, எல்லாமே கிட்டத்தட்ட அதே நிறத்தில் அணிந்த உடைகள். அது பட்டுப் பாவாடையா, என்ன வென்று சரியாக நினைவில்லை. அவர்கள் நடக்கையில், பட்டுபாவாடை சற்றே குவிந்து, அழகிய குடைப்போல், பல பிளிட்டிஸ்சின் அசைவுகளில் மிக அழகாய் இருந்தாள்.
என் தங்கையும், அவள் சென்றதை நான் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தாள். " நல்ல உயரம்டா.. அழகா இருக்கா. இல்லை", லேசாக சிரித்தேன். என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நான் வீட்டில் தான் ராமன் என்றா சொல்ல முடியும்...
ஒவ்வொரு நாளும் பூர்ணிமா போவதை எப்படியாச்சும் பார்த்து விடுவேன். என்றாவது ஒரு நாள் அவளிடம் பேசி விடுவது என நினைப்பேன்.
அதுவும், அவளிடம் போய் " பூர்ணிமா, உன் அசாத்தியமான உயரம், என்னை அதிசயப்பட வைக்குது" ன்னு சொல்லலாமா என நினைத்தேன். இது சரிவராது, சினிமா டைலாக் மாதிரி இருக்கு. வேறு ஒண்ணு யோசிப்போம் என விட்டு விட்டேன்.
அதற்குள் எனக்கு ஏகப்பட்ட ப்ரஷர், மாத்ஸ்க்கு ஒரு ட்யூசன், பிஸிக்ஸ்க்கு ஒண்ணு, கெமிஸ்ட்ரிக்கு ஒண்ணு. நிமிர முடியவில்லை. பூர்ணிமா மட்டும் என்றென்றும் நினைவில். அவளின் உயரம், மிக நீண்ட கால்கள் அதனை நினைக்கும் போது மனம் படபடக்கும். கோயில் புறாக்கள் விடியலில் சடசடவென பறந்தோடும், அது போல இருக்கும் அவளை நினைக்கையில்.
எஞ்சினியரிங் என்ட்ரஸ், அந்த என்ட்ரஸ் இந்த என்ட்ரஸ் என சாக அடிக்கவே, அவளின் நினைவுகள் மட்டுமே தங்கிவிட்டது. காலேஜ்ஜிற்கு என்னையும் துரத்தி விடவே, அவளை பார்க்க முடியாமலே போய் விட்டது.
பல வருஷம் அவளை ஃபேஸ்புக்கில் தேடிக் கொண்டிருந்தேன். நான்கு வருஷம் முன், அவளின் தம்பி மூலம் கண்டுபிடித்தேன். பிரயோஜனம் இல்லை, அவள் ஃபேஸ்புக்கில் இல்லவே இல்லையாம்.
இன்றும் உயரமான பெண்கள் என்னைக் கடக்கும் போது, சற்று நிமிர்ந்து பார்ப்பேன். ஆஃப்ரிகாவில் கூட ருவாண்டன் பெண்கள் மிக உயரம். அழகோ அழகு.
அப்படித்தான் ஒரு முறை ருவாண்டன் பெண்ணை ஆபிஸ் விஷயமாக சந்திக்க நேர்ந்தது...