Wednesday, April 28, 2021

ஏதோ நினைவுகள்!!!

 

அப்போதைய மெட்ராஸ், இன்றைய சென்னையில் என் மாமாவின் வீடு இருந்தது. அவரை மெட்ராஸ் மாமா என்றே தான் சொல்லுவோம். அவர்கள் மூன்று தலைமுறைகளாக மெட்ராஸ்சிலேயே இருந்ததால், மாமாவின் நிக் நேம் அப்படியே ஒட்டிக் கொண்டது.

பொதுவாக சர் நேம் கூட, சில தலைமுறைகள் முன்பு, பெரியவர்கள் வாழ்ந்த பூர்விக கிராமத்தின் பெயரை ஒட்டியே இருக்கும். இதுவே, வரும் தலைமுறைகளுக்கு சர் நேம் ஆக அமைந்து விடுகிறது. கேரளாவில், மோஸ்ட்லி, வீடுகளுக்கும் ஒரு நாமகரணம் சூட்டுவார்கள் - இதுவே பின்னர் காலங்களில் குடும்ப சர் நேம் ஆக மாறுவது உண்டு. ஆந்திராவில் கூட அப்படியே.
மெட்ராஸ்சில், என்னுடைய மாமாவின் தாத்தாவிற்கு நிறைய இடங்கள் இருந்ததாய் சொல்வார்கள். இரண்டாவது தலைமுறையில் ரெண்டு மகன்கள் அவருக்கு, பாகம் பிரிக்கும் போது, அதில் ஒருவருக்கு திருவல்லிக்கேணி வீடும், இன்னொருவருக்கு வீடு - சூளைமேடு பக்கம் இருந்ததாக சொல்வார்கள். நிலங்கள் கூட திருவிடந்தை தாண்டி எங்கேயோ இருந்ததாக ஞாபகம். ஆனால், பின்னர் வரும் சந்ததிகள், ஏதோ ஒரு சூழ்நிலையில் சொல்ப தொகைக்கு விற்று விட்டார்கள், ஆனால் அதுவோ இன்று, கோடிக்கணக்கில் விலை ஏறிக்கொண்டு இருக்கிறது.

ஸோ, நான் குறிப்பட வரும் மெட்ராஸ் மாமா, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர், தி.கேணியலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என சொன்னதாக, மங்கலான நினைவு. அதையும் விற்று, மௌண்ட் ரோட் பக்கம் வந்து விட்டார்கள்.
நாங்களும் அடிக்கடி மெட்ராஸ் மாமா வீட்டுக்கு போவோம். " டேய் ராம் கண்ணா, இங்கே வா ", என்று தான் சொல்வார். ஒவ்வொரு ஜனவரி ஒண்ணாம் தேதி birthday greetings card மறக்காமல் அனுப்பி விடுவார். இப்போது, அந்த உறவு முறைகள் பார்ப்பது அபூர்வம். அன்பான உறவுகள்.

இப்போதெல்லாம் உறவினர் வீட்டிற்கு யோசித்தே போவதாக இருக்கும். அப்படியே போனாலும், ஒரு மணி நேரம் கூட இருக்க முடியவில்லை. ஒட்டியிருந்த உறவுகள், அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டையாக சிதறி விட்டன. அத்தகைய உணர்வுகள் மட்டும் சில நினைவுகளில் நம்மை மூழ்கடித்து விடும். நினைக்கையில், நெஞ்சில் ஏதோ பாரமாய் பாறங்கற்களாக கனக்கும்.

மெட்ராஸ் மாமா, அந்த காலத்தை அதனை ட்ராம்வே காலம் என பிரித்து வைத்திருந்தார். மெட்ராஸ் மாமாவின் வீடு, வெலிங்டன் தியேட்டர் அருகிலேயே இருந்தது. தியேட்டர், பின்னர் காலங்களில், வெலிங்டன் ப்ளாசாவாக மாறியது. அந்த தியேட்டரின் பின்னாடியே ஒரு ரோட் போகும், பேட்டர்சன் ரோடா (?) - இப்போது பெயர் மாறியிருக்கலாம். அவரோட வீடு அங்கே தான் இருந்தது, ஏதோ ஒரு தெரு - முஸ்லிம் ஏரியா மாதிரி இருந்தது என நினைக்கிறேன்.
மெட்ராஸ் மாமா வேலைக்கு போனது பிரிட்டிஷ் பீரியட் டில், ஏர் ஃபோர்ஸ்சில் சேரும் போது, Warrant Officer என்ற ரேங்க்கில் சர்வீஸ் செய்திருக்கார். வார் ஃப்ளைட்ஸ் ரெஜிமெண்டில் இருக்கும் போது, ரஷ்யாவில் கொஞ்ச மாதங்கள் ட்ரெயினிங். இதுவே கேள்விப் பட்டது தான். என்னோட பெயரைக் கூட ரஷ்யன் லாங்க்வேஜில் எழுதிக் காண்பிப்பார். அந்த பேப்பரை வீட்டில் தேடினால், கிடைத்து விடும்.



சம்மர் என்றாலே ஒரு ஜாலி. மியூசியம், வண்டலூர் ஜூ - முதலில் சிட்டிக்குள்ளேயே இருந்தது. பழைய ஸ்பென்சர் - பிரிட்டிஷ் கால பில்டிங்ஸ், ஹிக்கின்பாதம்ஸ் அப்படியே பொழுது போகும். மவுண்ட் ரோட் வீட்டிலிருந்து, பீச் கூட அவ்வளவு தொலைவு இல்லை. அதுவும் ஏப்ரல் - மே மாதம் விடுமுறைகளில் மெட்ராஸ் மாமா வீடே கதி. பீச் இல்லைனா, தி. கேணி பெருமாள் கோயில், வடபழனி கோயில், மயிலை என ஒரு ரவுண்ட் வருவோம். எனக்கு தெரிந்து ரெட் கலர் பல்லவன்கள் ஓடிய காலம். அதிலேயே சுற்றி வருவோம். பஸ் நெம்பர் ஞாபகம் வைத்துக் கொள்வது அலாதியானது. எனக்கு ஞாபகத்தில் இருந்தவை 15B, 27B, 18C, 23C - இன்னும் இதே நெம்பரில் பஸ் ரூட் ஓடிக்கொண்டிருப்பது ஆச்சர்யம்.


வேறென்ன பொழுது போக்கு. வீடும் மவுண்ட் ரோட் பக்கத்தில் இருந்ததால், அடிக்கடி சினிமா அழைத்து போவதுண்டு. அப்போது, மவுண்ட் ரோட் முழுக்கவே தியேட்டர்ஸ் இருந்தது. காஸினோ, கெயிட்டி, சாந்தி, தேவி காம்ப்ளக்ஸ், அண்ணா - அப்படியே கொஞ்சம் வந்தா வெலிங்டன், அலங்கார், சத்யம் காம்ப்ளக்ஸ், லியோ கொஞ்சம் தாண்டின சபையர் காம்ப்ளக்ஸ்.




ஒரு சில படங்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. அப்போதே பென்ஹர், கன்ஸ் ஆஃப் நவ்ரோன், டென் காமெண்ட்மெண்ட்ஸ், மெகானாஸ் கோல்ட், இப்படி நிறையவே. காமெடி படங்களும் அழைத்து போவார்கள், அது Laurel & Hardy, Bed Spencer & Terrance Hill மூவிஸாக இருக்கும்.






என்னோட கஸின்ஸ் நிறையவே கதை சொல்வார்கள். அதுவும் காமிக்ஸ் சொல்லும் போது, ரிச்சி ரிச், ரெக்கி, லிட்டில் டாட்ஸ், லோட்டோ, Phantom, Diana Palmer இவையெல்லாம் கண் முன்னே கொண்டு வந்து விடுவார்கள்.

மெட்ராஸ் மாமாவும், குறிப்பிட்ட காலம் மிலிட்டரியில் இருந்து விட்டு, இந்தியா முழுக்க சுற்றி விட்டு, சென்னையிலே கடைசியாக இருந்து விட்டார். அவரும் பின்னர் காலங்களில், ஷாந்தி காலனியில் இடம் வாங்கி எங்கேயோ இருந்தார். ஆரம்பத்தில், ஒரு லேண்ட் மார்க், அண்ணா டவர்ஸ், நிறைய சினிமாவில் கூட இது தலையைக் காட்டியிருக்கும். பின்னர் காலங்களில் இன்னொரு லேண்ட் மார்க் க்ராண்ட் தியேட்டர் வந்தது.


கடைசியாக, ஏதோ ஒரு கம்பெனியில் அம்பத்தூர் எஸ்டேடில் வேலைப்பார்த்து வந்தார். அது மட்டும் நினைவில் இருக்கு. ஏதோ ஒரு சூழ்நிலை வந்தப் போது, ஷாந்தி காலனியில் இருந்த இடத்தையும் விற்று விட்டு, ஆவடிக்கு வந்து விட்டார்.

மனிதர்களின் வாழ்க்கைச் சக்கரம் ரொம்பவே அபாயகரமானது. எப்போதும் மேலேயே இருக்கும் என சொல்லி விட முடியாது. கொஞ்சம் இறங்கி, மீண்டும் ஏறும் போது, நாம் அப்போது, வாழ்க்கையின் விளிம்பில் இருப்போம்.




எப்படி இருந்தாலும், சில நினைவுகள் - அது ஒரு அழகிய கனாக் காலத்தையும் கொண்டு வரவே செய்யும்.

No comments:

Post a Comment